top of page

குறுங்கருத்து

உன் கடமைகளை செய்ய தவறாதே!

தவறினால் பழி சொல்லை ஏற்கவேண்டும் மறவாதே!

நல்ல செயல்களை செய்ய பழகிக்கொள்!

தகாத காரியங்களை செய்யாது விலகிக்கொள்!

ஏமாற்றி களிக்காதே!
ஏமாந்து  நிற்காதே!

எவரையும்  புண் படுத்தி பேசாதே!
வீணாக தரம் கெட்டு  தாழாதே!

பிறரை ஒப்பிட்டு  வாழாதே!
உன்னையே ஏமாற்றி வீழாதே!

தெளிவாய்  சிந்திப்பாயாக!
குழம்பிக்  கெடாதே!
குழப்பத்தில் தீர்வு தேடாதே!

நல்லார்  தமை  நாள் தோறும் நேசித்திரு!
நீ உய்ய அது ஓன்றே வழி யோசித்திரு!

கிட்டாததை  எண்ணி கலங்கிடாதே!
கிட்டியதை  தொலைத்து  தவித்திடாதே!

ஆசைக்கு  எல்லை  வகுத்திடு!ஆனந்தத்திற்கு அர்த்தம் புரிந்திடு!

துன்பம் என்னை துரத்துகிறதே  என்று அழுகின்றாய்!
இன்பம் எங்கு என்று தேட மறந்து நிற்கின்றாய்!

பொய் பேசி கொண்டதெல்லாம்  பொய்யாகிப் போய்விடுமே!

பிறருக்கு தீங்கு செய்ய எண்ணாதே!
அது உன்னையே  தாக்கும் மறவாதே!

பிற உயிர்களுக்கு  அன்பு காட்டு!
இயல வில்லையேல்  துன்பம் செய்யாதிரு!

தோல்வி அடைந்து விடுவாய்  என்று எண்ணி கலங்காதே!
வெற்றி எனும் ஊருக்கு சென்றடைய  தோல்விதான்  வழிகாட்டி -  மறவாதே!

சிந்தனையை  ஒருமைபடுத்து!
எடுத்த காரியத்தை திறம்பட  நடத்து!

பிறருக்கு கொடுப்பதால்  கெடுவதில்லை!
பிறரை கெடுப்பதால்  நீ வாழ்வதில்லை!

நீ கற்ற கல்வி  பணம் சேர்க்க  உதவும்!
உதவாது, வாழ்க்கையின் தத்துவத்தை  அறிந்து கொள்ள!

உன்னால் உன்னையே காப்பாற்றிக் கொள்ள  முடியாத நிலையில்!
உனக்காக  எதை சேர்த்துவைத்து காப்பாற்றிக்  கொள்ள போகிறாய்!

ஊன் வளர்க்க  உண்ணுகின்றாய்!
வளர்த்த  ஊன் உன்னை விட்டு மறைந்து விடும் பார்!

நீ கற்ற கல்வி  பணம் சேர்க்க  உதவும்!
உதவாது, வாழ்க்கையின் தத்துவத்தை  அறிந்து கொள்ள!

பிறருக்காக உன் சுகத்தை  இழைக்கின்றாய்!
சுகத்தை  இழந்த  பின் வாழ்வென்ன  வாழ்வோ ? சொல் ?

நடக்கும் நிகழ்வுகள்   உண்மைபோல் தெரியும்!  
உண்மையை அறிந்தால்  ஏதும் நிகழவில்லை  என்று புரியும்!

வாழ்வுதான் மிக முக்கியம் என்பதுபோல்  காட்சி அளிக்கும்!
மரணம் தான் முக்கியம்  என்று சாட்சி அளிக்கும்!

இறைவனின் அருளை பெற தவிக்கின்றாய்!
தாயின் கருணையை  கண்டதில்லையோ!
இறைமையை  அவளில்  உணரவில்லையா!

புரிந்து கொள்ள முடியாத விந்தை மனித வாழ்வு!
புரிந்து கொண்டால் சிந்தை தெளிந்த  வாழ்வு!

பகைமையை மறந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள!
சமாதானமே நிம்மதியை தரும்!
பகையால்  தூக்கம்  கெடும், துக்கம் சேரும்!

சுயநலமாக இருக்காதே!

தன் நலமே இல்லாது ஒருவரும் இங்கு உயிர் வாழ இயலாது!

நிலை இல்லாத உலகம்!

இதில் நீ நிலைத்திட நினைப்பது அவலம்!

பண வேட்டையில் உன் வாழ்நாளை கழிக்கின்றாய்! உன் குணம் வேட்டையாடப்பட்டு வீணே அழிகின்றாய்!

தீங்கிழைத்து நீ அடைந்ததெல்லாம்!

உனக்கு தீங்காய் வந்தடையும்!

ஏற்றமும் தாழ்வும்  பொருளாதாரத்தால்  வருவது தவறல்ல!
தவறு என்றாகும், மனத்தால், குணத்தால்  தாழ்வடைந்தால்!

பேராசையே பொய் உறைக்கத் தூண்டும்!

மாறாக, சீராசையே மெய் அறிவுடன் நல் வாழ்வு வாழ்வும்!

நீதியை கேட்டறி , தர்மத்தை  கற்றுணர், சட்டத்தை மதித்து  வாழ், வானுலகமும்  உனை போற்றும்  பார்!

மனித வாழ்வு அற்புதமானது!
அதை அற்பத்தனமாக்கி  விடாதே!

தன்னலம் கருதாது  வாழ்விங்கு இயலாது!
சிறிதேனும்  பிறர் நலம் கருதாது வாழும்  வாழ்வு நிறைவாகாது!

நல்ல உள்ளங்கள் நல்ல செயல்களையே  நாடும்!
நல்ல செயல்களால்   நாடே  உயர்வடையும்!

நல்ல செயல் செய்ய இயலவில்லை எனினும்,
கெடுசெயல் செய்யாதிருப்பதே  நற்செயலாம் !

எண்ணங்களின் வெளிப்பாடு சொற்களாம்!
நல்லெண்ணத்தின் வெளிப்பாடு நற்சொற்கலாம்!

குறைத்து பேசுக, குறிப்பறிந்து பேசுக, இனியதை பேசுக, பழகுக - பேசாதிருக்கும் நிலை!

சினம் கொண்டால் சிந்தனை சீர்கெடும், துன்பம் சேர்க்கும்  செயல்நாடும், வீண் வாதனை வந்து சேரும் !

பொய்யுரைத்து வாழதெல்லாம்  வாழ்வல்ல!
மெய்யுணர்ந்து  வாழும் நிலை தவனிலையே!

எப்படி வேண்டுமானாலும்  வாழலாம் என்பது மனிதா, உனக்கு பொருந்தாது!
சுற்றமும், நட்பும் பாராட்டும்படி வாழ்வதே உனக்கு சிறப்பு!

தீயதை என்னாது இருத்தல்  தவமாக  கொண்டால், நீங்கது செயல் வடிவம் கொள்ளாமல்  விழுமே!

தனக்கென்று ஏதும் இல்லாமல்,  தர்மம் செய்ய இங்கு இயலாது!

நீ எண்ணியதெல்லாம் சரிதானா, என்று எண்ணிப்பார்த்தாயா ?
எண்ணமதனை  சரி செய்யும் வழிதனை யோசித்தாயா! 

மதங்கள் தோன்றியது உன்னை உன்னத மனிதனாக்க!
மனிதனோ  மதம்கொண்டு  மோதி  சாய்கின்றான்!

வெற்றிதான் வாழ்வின் லட்சியம் என்றால், உயிரிழந்து   தோற்றதுதான்  வாழ்வின் மிச்சம்!

தீங்கது செய்தல் நன்மைபோல் தெரிந்து, பெரும் தீ போல் தொடர்ந்து  வந்தெறிக்கும்!

தான் படைத்தனைத்தையும் காப்பான் இறைவன்!
தான் பெற்றதனைத்தையும்  காப்பவள் அன்னை!

மனம் போகும் வழியெல்லாம் போனாய்!
வாழ்வு கெட்டு வீழ்ந்து  நின்றாய்  வீணாய்!

எல்லோரிடமும் அன்பு காட்டு!
நாம் ஒருவருக்கு ஒருவர் வேண்டியவர்களே!

மனிதநேயம்  மகத்தானது!
நேசித்துப்பார் புரியும் அது!

சாதிகள் பேசி சாதிக்காதே!
அது சதி என்று மறவதே!

உன்னை புரிந்து கொள்ள முடியாத நிலையில், 

இன்னொரு  துணையை இணைத்து,
மண வாழ்வில் எதை புரிந்து கொள்ள போகிறாய்!

அமைதியும் சாந்தமும்  இறைவனிடம்  மட்டுமல்ல!
பெண்மை  நிறைந்த தாயிடமும் இறைவன்  கொடுத்திருக்கிறான் !

கொடுப்பது எதுவாயினும்  கொள்ளுவார் தமை அறிந்து ஆராய்ந்து கொடு !

கடமையை தவறாது செய்!
அவரவர் பிறப்பிற்கு  ஏற்றாற்போல்  கடமையும் அமைகிறது!
அதை மறுக்காமல் செய்!

வாழ்க்கையை சுமையாக  நினைக்காதே!
நல்லவர்  தமக்கு சுமை தாங்கியாக  வாழ்ந்து பார்!
வாழ்க்கை சுவையாக மாறும்  நிலை காண்பாய்!

துயர் எண்ணாது கருமம் செய்!
பலன் எண்ணாது தருமம்  செய்!
தரம் எண்ணாது அன்பு செய்!
மதம் எண்ணாது பக்தி செய்!

￰உடலையும் காக்கவேண்டும், அதைவிட அதிக ￰சிரத்தையுடன் மனதையும் காக்கவேண்டும்.

வாழும் இலட்சியத்தை நீ அடைய போராடுகின்றாய்!
உனை வீழ்த்தும் லட்சியத்தில் காலன் குறியாக இருக்கின்றான்!

எண்ணங்களின் மூட்டைகள் மனிதர்கள்!
எண்ணிக்கை இல்லா எண்ணங்களில் வாழ்கிறவன் மனிதன்!

சினம் கொண்டு சீரழியாதே!
சினத்தால்  நன்மை இல்லை!
அதை தொலைத்தால் பகை இல்லை!
சினம் அறிவுக்கு பகை! அறிவு வாழ்விற்கு துணை!

மனம் ஒரு குழந்தை  போல்!
அதை வளர்க்கும்  கலையை கற்றுக்கொண்டால்  

நீ சொல்லுவதை  அது கேட்டு நடக்கும்!

எதை அடைந்தாலும்  திருப்தி இல்லை!
எவ்வளவு பெற்றாலும்  போதும் என்று எண்ணமில்லை!
என்னதான்  உன் பேராசையோ!  

எங்கேதான்  இது முடியுமோ!

நல்ல எண்ணம் மேன்மை படுத்தும்!
தீய எண்ணம் வாழ்வை கெடுக்கும்!
நல்லெண்ணத்தை  வளர்ப்போம்!
தீய எண்ணங்களை  தவிர்ப்போம்!

பயம் கொண்டு தினம் தினம்  சகாதே!
பல வெற்றிகளை  பயத்தால்  இழக்கின்றாய்!
பல தோல்விகளை பயத்தால் அடைகின்றாய்!
பயத்தை உதறிடு!
வெற்றியை அடைந்திடு!

வாழ்க்கையை ஒரு 
குறிக்கோளுடன் வாழு!
அந்த குறிக்கோள் உனக்கு முழுமையான 
திருப்தி தருமா?
என்று முடிவான முடிவுசெய்!

மனம் போகும் வழி எல்லாம் போனாய்!
வாழ்வு கெட்டு வீழ்ந்து நின்றாய் வீணாய்!
நுண்ணறிவால் சிந்தித்தால் புரியும், மனம் செய்யும் வித்தை தெரியும்!

நிலை என்று நீ கண்டு ஓடியதெல்லாம் நிலை இல்லாது ஓடிவிடும் காண்!
நிலை பெற்று யார் இங்கு நிற்பார்!
நீ உணர்ந்து உயர்ந்து நில்!

பிறந்து வந்தாய்!
நெடிய வளர்ந்தாய்!
அகல பெருத்தாய்!
மடிந்து மறைந்தாய்!

￰நல்லவர்களுக்கு உதவு!
நல்ல சொற்களைபேசு!
நல்ல எண்ணங்களை நினை!
நல்லோருடன் பழகு!
நல்ல குணங்களை கொள்!

பலன் கருதி வாழ்கின்றாய்!

பலன்கிட்டா நிலையில் வேதனையில் வீழ்கின்றாய்! பழிதனை பலபேரிடம் சுமத்துகின்றாய்! சம மன நிலை அறியாமால் தடுமாறி ஏங்குகின்ராய்!

பொருள் சேர்த்தாய் அதில் பொருள் ஒன்றும் இல்லை!
அருள் சேர்த்தால் அதில் பரம்பொருள் ஒன்று உண்டு!

வெற்றி தான் வாழ்வின் லட்சியம்!
எது வெற்றி என்று அறியாதது  அலட்சியம்!

உயர்வை  நோக்கி செல்வதே வாழ்வின் நோக்கம்!
உயர்வான  எண்ணங்கள், செயல்களே உயர்வுக்கான வழி!

ஆசை என்பது ஆசைப்பட்டது கிடைத்தவுடன் நின்று விடுவதல்ல!
ஆசை என்பது எண்ணிக்கையில் அடங்காதது விரிந்து கொண்டே போவது !

மனிதர்களே!  உங்கள் வாழ்க்கை பயணத்தை  நீங்கள் தீர்மானிக்கவில்லை!
மாறாக!  பெற்றாரும், உற்றாரும், சமூகமுமே இதை தீர்மானிக்கின்றது!

இயற்கை வழியில் உயிர்கள் அனைத்தும் செயல் படுகின்றது!
இயற்கையை அழிக்க மனித இனம் செயல் படுகின்றது!

உனக்கு பிடித்த மதத்தை நம்பு!
உனக்கு பிடித்த தெய்வத்தை நம்பு!
இவை உன் வாழ்வை உயர்த்தும் நம்பு!
உனைக் காக்கும்! துணை நிற்கும்  நம்பு!

பணத்தைக் கொண்டு இச்சை பட்டதெல்லாம்  வாங்கி மகிழ்ந்தால்!
இனி போதும் என்ற உணர்வை உன்னால்  வாங்க முடியுமா!

சீரிய  சிந்தனையால்  வாழ்வுதனை  அமைத்துக் கொண்டு!
உனைச்சார்ந்த மனிதர்கள் தமக்கு 
செய்வாய் தொண்டு!

உன் உள்ளத்தில் தூய்மை  நிலை பெற்றால்,
உனை சுற்றி தூய்மையை  பரப்பி  நிற்பாய்!

வெற்றி என்பது விரும்பியதை அடைவது!
தோல்வி என்பது விரும்பாததையும் அடைவது!

மனம் போனபடி வாழாதே!
மதி மயங்கி தடுமாறி வீழாதே!

தான் வாழ எதையும் செய்ய துணியும்!
நல்லோர் இணக்கத்தால் இப்பேராசை தணியும்!

எப்படி வேண்டுமானாலும் வாழலாம்  என்பது மனிதா, உனக்கு பொருந்தாது!
சுற்றமும் நட்பும் பாராட்டும் படி வாழ்வதே உனக்கு சிறப்பு!

வாழ்வின் ஆதாரம்  செல்வம் மட்டுமே அல்ல!
நோயற்ற உடலே அனைத்திற்கும் ஆதாரம்!

ஆசை விரிவடைந்தால்  வெறியை அடையும்!
வெறியால் மதியிழந்து வாழ்வே நாசமடையும்!

தொடர் வெற்றி அகந்தையையும் அகங்காரத்தையும்  கொடுக்கும் !
தொடர் தோல்வி துக்கத்தையும்  விரக்தியையும்  கொடுக்கும் !

வலிமை உள்ளவர் திறமையினால்  பணம் சேர்ப்பார்!
வலிமை அற்றவர்  அதை அபகரிக்க வழி பார்ப்பார்!

உன் உள்ளமதை  சுத்தம் செய்ய பழகி விட்டால்!
உலகை சுத்தம் செய்யவும் விருப்பம் கொள்வாய்!

துன்பத்தையும் துயரத்தையும் உள்ளடக்கி!

அமைதியையும் ஆனந்தத்தையும் தாம் பெற்ற மக்களுக்கு

அள்ளித்தரும் உயிரினம் - தாய்!

எண்ணக்குவியலுக்கு நடுவே வாழ்வை தொலைத்தோமே! எண்ணற்ற எண்ணமதை அடக்கியாண்டால் வாழ்வே சொர்கமாகுமே!

ஒருவருக்கும் கேடு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்!

கேட்டினால் வரும் எந்த பலன் நன்மைப்போல் காட்டி கேடு கேட்ட நிலையில் தள்ளும்!

உன் செயல் அனைத்தும் உனக்கு நன்மையா என்று பார்க்காதே, உன் செயல் அனைத்தும் எவருக்கும் தீங்கு  இல்லாமல் பார்த்துக்கொள் !

தனக்கென்று ஏதும் இல்லாமல் தர்மம் செய்ய இங்கு இயலாது !
பிறர்கென்று  சிறிதேனும்  கொடுக்காமல் வாழ்வது சிறந்த வாழ்வாகாது !

ஓடி ஆடி தேடியதெல்லாம் நீ!
பிணமாக அடங்கிய பின் யாருக்கோ!

ஆசைதனை ஆராயும் அறிவுத்திறன் பெற்றவரே,

ஆசையின் பெருவலையில் சிக்காமல் சிறப்படைவாரே !

பிறர் மகிழ கொடுக்கும் தன்மை மனிதரின் உயர் குணமாம், பிறர் மனம் நோக கெடுக்கும் தன்மை மனிதரின் மிக தாழ்ந்த குணமாம் !

இறைவனிடம்  கையேந்தி  பிச்சை கேட்பதே உன் தொழிலாகிவிட்டது, மற்றெந்த உயிரினமும் இதை செய்யவில்லை, உனக்கு மட்டும் அறிவு பழுதாகிவிட்டது !

உன் துன்பம் பெரிதென எண்ணி, தன் துன்பம் சிறிதென தள்ளி, நீ வாழ தான் வாடத்தயங்காத, உன்னதப் படைப்பாம் - தாய்!

உன்னைச் சுற்றியுள்ள மனிதர்களே உன் வாழ்க்கை முறையை தீர்மானிக்கிறார்கள்!
அதனை தாண்டி சென்றடையும் பாதையும் அறியீர்!
பயனமும் அறியீர்!

எது வேண்டும் என்று தெரியவில்லை!
வேண்டியது அடைந்தும் நிறைவில்லை!
நிறைவு பெற வழியதுவும் புரிய வில்லை!
நிறைவு மனம் வேண்டி பெற ஒன்றுமில்லை!

￰எவ்வுயிர்க்கும் இல்லா சிறப்பு மனிதர்க்கு  உண்டு!
அது சிந்தனை செய்யும் செயலாம்!
சிந்தித்ததால் மனித இனம் உயிரினங்களின் சிறந்த இனம் 
ஆகப்பெற்றது!

உன் மதம் சொல்லும் கருத்தை கருத்துடன் கருத்தில் கொள்!
மதத்தின் கருத்தை நுனிப்புல் மேயாதே!
மதம் போதித்தபடி வாழ்வை நடத்து!
உன் மதத்தார் உன்னைப் போற்றி வாழ்த்துவரே!

கல்லில் சிற்பம்  வடித்து, கடவுள் என்று போற்றி வணங்கினாய் !
கல்லினும் கருணைமிகு  நல்லோரைக் கண்டு வணங்கும்  செயலே சிறப்பு !

வாழ்வு ஒரு போராட்டம் என்றறிந்தால்!
போராட்டம்  "ஏன்" என்று எண்ணிப்பார்!
அர்த்தமின்றி போராடும் அற்ப  மனிதர்களாய்!
நாம் ஏன் ஆகிப்போனோம் என்றெண்ணிப்பார்!

என்னுடையது என்று எண்ணி ஏமாறும் ஏமாளிகளே!
உன்னுடையது முன்பு ஓரு காலத்தில் எவருடையது ?
உனக்கு பின்பு வரும் காலத்தில் அது யாருடையது ?
சிந்தித்துப்பார் !  நீ சிக்கியிருக்கும் சிக்கல்  புரியும்!

உனக்கு எது தேவை  என்று அறிவாயா!
உனக்கு எது வாழ்வின் அவசியம்  என்று உணர்ந்தாயா ?
உனக்குள் நீ இவைகளை கேட்காமல் வாழும் நாள் எல்லாம் வீண் நாளே!

பெண் அன்பின் உருவாக படைக்கப் பட்டாள்!
ஆன் அறிவின் வெளிப்பாடாக படைக்கப்பட்டான்!
அன்பும் அறிவும் நிறைய பெற்ற வாழ்வே மகிழ் உறும்.
அன்பில்லா அறிவும், அறிவில்லா அன்பும் துன்பம் தரும்!

உனக்காக நீ வாழ உன்னால் இங்கு முடியாது!
உன் விருப்பம் எது என்று கேட்க இங்கு யாருமில்லை!
பிறருக்காக உன் சுயத்தை இழக்கின் றாய்!
சுயத்தை இழந்த பின் வாழ்வென்ன வாழ்வோ ? சொல்?

பணம் தேடுவதே  வாழ்வின் குறிக்கோள்  என்றாகிவிட்டது!
பணம் வந்தாலும் வாழும் வழியறிந்து வாழ தெரியாது, பணம் போனாலும்  வாழும் 
வகையறிந்து  அமைதியுடன்  வாழாது ! மனிதா! 
பணம் தேடும் தேடலில்  வாழும் வகைதனையும் தேடு!

உன் தோல்வியே பயமாக உருவெடுக்கின்றது!
பயமே உன்னை உருக்குலைய வைக்கின்றது!
உருக்குலைந்த மனம் தடுமாறி தவிக்கின்றது ,
இனி ஏது வாழ்வு ? என்று மீண்டும், மீன்டும் தோற்கின்றது!

bottom of page