மனிதனின் கடவுள்
கடவுள் மனிதர்களை படைத்தான் அல்லது படைத்தாள் அல்லது படைத்தது, என்று பல காலமாய் நமக்கு சொல்லப்பட்ட செய்தி. இதை யார் சொல்லியது? வேறு யார் சொல்லுவார்கள் ? மனிதனே கண்டுப்பிடித்து சொன்னான். எங்கு போய் இதை நேரில் பார்த்தான் ? அது அவனுக்கே தெரியாது. ஆனால் கண்ணை மூடி பார்த்ததில் தான் கண்டுபிடித்த அற்புதம் கடவுள் என்று கூறினான்.
இப்படிபட்ட மக்கள் சில ஆயிரம் பேர்கள் உலகம் முழுதும் உள்ளார்கள். இவர்கள்தான் நமக்கு கடவுளை கொடுத்தார்கள். ஆதி காலத்தில் மனித இனத்திற்கு கடவுளே தெரியாது. சரியாக சொல்லவேண்டும் என்றால், எல்லா உயிர் இனங்களை போல் , மனிதர்களும் வாழ்ந்தார்கள். நீரில் வாழும் உயிர்கள் கடவுளை தேடவில்லை, நிலத்தில் வாழும் உயிர்களும் கடவுளை தேடவில்லை. எல்லா உயிர்களும் இரை தேடின, உயிர் பிழைத்து வாழ வழி தேடின, இன உற்பத்திக்கு துணை தேடின, இறுதியில் உடலை விட்டு மறைந்து போயின. இன்றுவரை இதை கடைப்பிடித்தே உயிர்கள் அனைத்தும் வாழும்போது மனிதன் மட்டும் தடம் மாறினான்.
இவனே இவனை உயர்வாக எண்ணினான். பூமியில் வாழும் அனைத்து உயிரினத்தை விட தானே சிறந்த உயிரினம் என்று சொல்லிக்கொண்டான். இவனை இவனே மெச்சிக்கொண்டான். பாராட்டிக்கொண்டான். இவனே அறிவில் சிறந்தவன், ஆற்றல்மிக்கவன், ஆறறிவு கொண்டவன் என்று ஆயிரம் , ஆயிரம் தற்புகழ்ச்சி கொண்டு மகிழ்ந்தான். இது போதாது என்று எண்ணிய மனிதன், அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்து மனிதர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று மிக ஆழ்ந்து சிந்தித்து கண்டுப்பிடித்த ஓர் அற்புதம் - கடவுள் .
தான் கண்டுபிடித்த கடவுளை மக்களிடம் கொண்டு சேர்த்தான். அதுவரை மக்கள் யாருக்கும் கடவுளை தெரியாது. எனவே, கடவுளை கண்டுபிடித்த ஒவ்வொரு நாட்டு மனித மேதைகள் கடவுளுக்கு உருவத்தை கொடுத்தார்கள். கடவுளை பற்றி அவர்களுக்கு அன்று மனதில் தோன்றிய கதைகளை மக்களுக்கு எடுத்து சொன்னார்கள். ஆரம்பத்தில் குழம்பிய மக்கள் பிறகு மெல்ல மெல்ல தெளிவு பெற்று , ஆகா அற்புதம் என்று மெய்சிலிர்த்து, கடவுளை பற்றிய கதைகளை உலக முழுதும் மனித இனம் நம்ப ஆரம்பித்தது.
கடவுளை கண்டுபிடித்த மனித கூட்டம் சும்ம இருக்குமா ? அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தனர். இவ்வளவு நாள் மற்ற எல்லா உயிரினத்தை போல் வாழ்ந்த மனித இனம் , சிறிது சிறிதாக தன் மேல் உள்ள நம்பிக்கையை இழந்தது. கடவுளை கண்டுபிடித்த கூட்டம் சொன்ன கடவுள்கள் மீது முழு நம்பிக்கை வைக்க ஆரம்பித்தது. அப்புறம் என்ன ? கடவுளை கண்டுபிடித்த கூட்டத்திற்க்கு குறைவில்லா கொண்டாட்டம்தான். மக்கள் அவர்களை தெய்வ தூதர்கள் என்று அஞ்சி மதித்தனர். அரசனும் அஞ்சினான்.
அன்று என்றோ தொடங்கிய இந்த கடவுள் கண்டுபிடிப்பு , இன்று வரை உலகமே அஞ்சி , கைகூப்பி , தொழுது , அழுது கடவுள் என்று அன்று கற்பிக்கப்பட்ட உருவத்திடம் சரணடைந்து கிடக்கின்றனர். கடவுளை உலகுக்கு கொடுத்த கூட்டம் இன்றும் தம்மை வளமாக , கடவுளின் தூதனாக காட்டிக்கொண்டு மேலோராக வாழுகின்றனர்.
மனிதன் படைத்த கடவுளுக்கு எவ்வளவு சக்தி என்று இப்போது புரிகிறதா ? இவனே கடவுளை உண்டாக்கினான், அதில் இவனே மயங்கி கிடக்கின்றான். விசித்திரமான இனம் - இந்த மனித இனம்.