ஆன்மீகம்
பூமியில் கோடான கோடி உயிரினங்கள் வாழுகின்றன.அதில் மனிதர்களும் அடங்கும்.
வாழுகின்ற உயிரினங்கள் அனைத்துமே ஒரே விதியின் கீழ் வாழுகின்றன. பிறப்பது, வாழுவது இறுதியில் மடிவது.
இந்த விதிமுறையில் எந்த உயிரினத்துக்கும் விதிவிலக்கு இல்லை. இந்த நிகழ்வு பல கோடி ஆண்டுகளாய் மாற்றம் இன்றி, ஒரே மாதிரி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
பிறக்கும் எல்லா உயிர்களும் - வருகிறது, வாழ்கிறது, மறைகிறது.
மனித உயிரினமும் இதே சட்டத்தின் படி - பிறக்கிறது , வாழ்கிறது , இறக்கிறது.
மனித இனத்தை தவிர , எந்த உயிர் இனமாவது இந்த வாழ்க்கை சுழற்சியில் கடவுளை தேடுகிறதா? கடவுளிடம் அழுது புலம்புகிறதா? என்னை காப்பாற்று என்று கெஞ்சுகிறதா ? கோயில் கட்டுகிறதா? இல்லையே !
படைக்கப்பட்ட எண்ணில் அடங்கா உயிரினங்கள் அனைத்துமே - பிறப்பதும், அதனால் வாழ்வதும், மரணிப்பதும் என்ற கோட்பாட்டை ஒரே பாணியில் கடந்து செல்லுகின்றன - மனித இனத்தை தவிர.
எந்த உயிரினத்துக்கும் கடவுள் தேவைப்படவில்லை - மனித இனத்தை தவிர.
கடவுளை புறக்கணித்த கோடான கோடி உயிரினங்கள் - பிறக்கவில்லையா ? வாழவில்லையா? இறக்கவில்லையா?
எல்லாமே சரியாகத்தானே நடக்கிறது?
மனித இனத்துக்கு மட்டும் எங்கிருந்து கடவுள் வந்தது?
பக்தி எங்கிருந்து வந்தது? பூசை எதற்கு? மந்திரங்கள் எதற்கு?
உயிர்கள் அனைத்துக்கும் ஒரே சட்டம் - பிறப்பு , சில கால இருப்பு, மாற்ற இயலாத இறப்பு என்று இருக்கும்போது, மனித இனம் மட்டும் இதில் மாறுபட்டு விடவா முடியும்? முடியாதே!
பிறகு எதற்கு எந்த உயிரினத்திற்கும் இல்லாத இந்த தேவையற்ற தன்மைகளை மனித இனம் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறது? அதன் பலன்தான் என்ன?
வாழ்ந்தே ஆகவேண்டும், இறந்தே தீர வேண்டும். இது பொது விதி.
இந்த விதிக்கு உட்பட்டு வாழ எந்த உயிரினத்திற்கும் கடவுள் தேவைபடவில்லை ஆனால் மனித இனமே உனக்கு ஏன் கடவுள்?
மனித இனமே மற்ற உயிரினங்களை போல் பூமிக்கு வா, வாழு, மறைந்து போ.